அருள்பணி. P. ஜான் பால்
கிறிஸ்து பிறப்பு விழா எசா 9 : 2-4, 6 - 7, தீத் 2: 11-14, லூக் 2 : 1-14
திருப்பலி முன்னுரை
கிறிஸ்து பிறப்பு விழா அதிசயமானது, அற்புதமானது. ஏனெனில், மனிதருக்காக இறைவன் பிறக்கின்றார். தன் வார்த்தையாலே அனைத்தையும் உண்டாக்கிய இறைவன் மனிதனை மட்டும் அவ்வாறு உருவாக்க விரும்பவில்லை; மாறாக, தன் கரங்களால், தன் சாயலில் மனிதனை உருவாக்கி, அவனுக்குள் தன் மூச்சை ஊதுகிறார். காரணம் மனிதன்மேல் அவர் கொண்ட அன்பு. அதே வார்த்தையை சொல்லி மனிதன் தனக்கு எதிராக செய்த எல்லா பாவங்களையும் மன்னித்து, அவனை மீட்க கடவுளால் முடியும். எனினும், வார்த்தையை சொல்லாமல் தன் வார்த்தைக்கு உருவம் தந்து தன் மகனை இவ்வுலகில் பிறக்கச் செய்கிறார். காரணம், அதே அன்பு தான். ஆம், கிறிஸ்து பிறப்பு விழா என்பது அன்பின் பிறப்பு விழா, இரக்கத்தின் பிறப்பு விழா, மகிழ்வின் பிறப்பு விழா, பகிர்வின் பிறப்பு விழா, அனைத்துக்கும் மேலாக நமது மீட்பின் பிறப்பு விழா. வழக்கமாக பிறந்த நாளில், பிறந்த நாளை கொண்டாடுபவர்தான் புத்தாடை அணிந்து இருப்பார். அவருக்குத்தான் பரிசுப் பொருட்கள் தரப்படும். ஆனால், கிறிஸ்து பிறப்பு விழாவில் நாம் அனைவருமே புத்தாடை அணிகிறோம். நாம் அனைவருமே பரிசுப் பொருட்களை பகிர்ந்து கொள்கிறோம். காரணம் நமது மீட்பு பிறந்திருக்கிறது, நமது அன்பு பிறந்திருக்கிறது, நமது இரக்கம் பிறந்திருக்கிறது. இந்த அன்பை, இந்த இரக்கத்தை பிறரோடு பகிர்வதில் தான் நமது மீட்பு இருக்கிறது என்பதை இந்த கிறிஸ்து பிறப்பு விழா நமக்கு நினைவு படுத்திக் கொண்டே இருக்கிறது. அன்பே கடவுள், அந்த அன்பு நமக்காய் இவ்வுலகில் பிறக்கின்றது. ஆகவே, அன்பை பிறரோடு பகிர்வதில்தான் கிறிஸ்து பிறப்பு விழா நிறைவு காண்கிறது என்ற சிந்தனையோடு, இக்கிறிஸ்து பிறப்பு விழா திருப்பலியில் பக்தியோடு பங்குபெறுவோம்.
முதல் வாசக முன்னுரை:
அடிமைத்தனம் எனும் காரிருளில், பாவம் எனும் ஊரில் வாழ்ந்து வந்த தன் மக்களை மீட்க, தந்தை கடவுள் தன் மகனை உலகிற்கு அனுப்புகிறார். இத்திருமகன் பாவத்தையும், அடிமைத்தனத்தையும் தகர்த்தெறிந்து, தன் மக்களை நீதியோடும், இரக்கத்தோடும் ஆட்சி புரிவார் என்று கூறும் இம்முதல் வாசகத்தைக் கேட்போம்
இரண்டாம் வாசக முன்னுரை:
ஆண்டவர் இயேசு மீண்டும் நமக்காக வருவார் என்ற மகிழ்ச்சியோடு அவரை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கிறோம். நம்முடைய எதிர்பார்ப்புக்கு ஏற்றவாறு இறைவன் கண்டிப்பாக மாட்சியோடு வந்து, நம்மை நமது நெறிகெட்ட நிலையிலிருந்து மீட்டு, நற்செயல்கள் புரிவதில் ஆர்வம் உள்ள மக்களாக மாற்றுவார் என்று கூறும் இவ்விரண்டாம் வாசகத்தைக் கேட்போம்.
மன்றாட்டுக்கள்:
1. அன்பு தந்தையே! பாவத்தில் வாழ்ந்த மக்களை மீட்க உம் திருமகனை இவ்வுலகிற்கு அனுப்பினீர். உம் திருமகனின் உடனிருப்பை இன்று எங்களுக்கு நினைவுபடுத்திக் கொண்டிருக்கும் திருஅவையை ஆசீர்வதித்து, அதனுடைய திருப்பணியாளர்கள் உம் திருமகனை போலவே அனைவரையும் அன்பு செய்யவும், உமது மீட்பை நாங்கள் பெற்றுக்கொள்ள எங்களுக்கு துணைபுரிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்
2. இரக்கமுள்ள தந்தையே! அன்று உம் மக்களை வழிநடத்த அரசர்களையும், நீதிமான்களையும், இறைவாக்கினர்களையும் தேர்ந்தெடுத்தீர். இன்று எங்களை வழிநடத்த தலைவர்களை தந்திருக்கிறீர். இத்தலைவர்கள் சுயநலத்திலிருந்து விடுபட்டு, தம் மக்களுக்கு அன்பையும், நீதியையும் கொண்ட ஆட்சியைத் தரவேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
3. பரிவுள்ள தந்தையே! உம் திருமகனின் பிறப்பு விழாவைக் கொண்டாடி கொண்டிருக்கும் நாங்கள், அவரைப்போலவே அயலானை அன்பு செய்து, பகைவர்கள் மீது இரக்கம் காட்டி, எங்களிடம் இருப்பவற்றை பிறரோடு பகிர்ந்து வாழும் கிறிஸ்தவர்களாக மாறவேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
4. எங்கள் விண்ணகத் தந்தையே! இயற்கை சீற்றத்தால், போரினால் கிறிஸ்து பிறப்பு விழாவினைக் கொண்டாடுவதற்கு வாய்ப்பில்லாமல் இருக்கும் மக்களை ஆசீர்வதியும். அவர்களும் உம் திருமகன் கொண்டு வந்த அன்பைச் சுவைத்து, பிறரோடு அதைப் பகிர்ந்து, உமது மீட்பைப் பெற்றுக்கொள்ள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
Comment